வியாழன், 25 நவம்பர், 2010

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் 1




இந்த வாரத்தின் கோவில் திருவண்ணாமலையில் இருக்கும் திரு அருணாசலேசுவரர் திருக்கோவில். மற்ற இடங்களில் நாம் மலைமேல் சுவாமி இருப்பதாக கேள்வி பட்டிருப்போம், ஆனால் இங்கு மலையே சுவாமியாக இருப்பது தான் விசேஷம். இந்த மலையின் சுற்றளவு 14 கிலோ மீட்டர். இந்த மலையானது கிருதாயுகத்தில் அக்னி மலையாகவும்,
திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் பொன் மலையாகவும், பின் கலியுகத்தில் கல் மலையாகவும் உள்ளது. முக்தி தரும் இடமாக கருதப்படும் இடங்களில் இத்திருத்தலமும் ஒன்று.
திருவாரூரில் பிறக்க வேண்டும், காசியில் இறக்க வேண்டும், தில்லை சிதம்பரத்தை போய் பார்க்க வேண்டும், ஆனால் திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமிது.
இம்மலையில் சுற்றும் வழியில் அஷ்ட லிங்கங்கள் உள்ளது. அவை இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம். இம்மலையை சுற்றி வந்தால் இறைவனை சுற்றுவதற்கு சமானம். அதுவும் பௌர்னமியன்று சுற்றினால் மிகவும் விசேஷம். இத்திருக்கோவிலில் ஆறு பிரகாரங்கள் உள்ளன. ஒவ்வொரு பிராத்திலும் பல சந்நிதிகள் இருக்கிறது. முதல் பிராகரத்தில் சுவாமி சந்நிதியுள்ளது. மூன்றாவது பிராகரத்தில்
உண்ணாமலை அம்மன் சந்நிதி உள்ளது. மற்ற பிராகரங்களில் வேணுகோபாலசுவாமி சந்நிதி, வினாயகர் சந்நிதி, முருகன் சந்நிதி, கால பைரவர் சந்நிதி, நவகிரக சந்நிதி, வள்ளாள மகாராஜா கோபுரம், கிளி கோபுரம், அருணகிரினாதர் மண்டபம், பாதாள லிங்கம், ஆயிரங்கால் மண்டபம், மற்றும் பல சந்நிதிகள் உள்ளது. இக்கோவிலின் ஸ்தல விருட்சம் மகிழ மரம். இந்த மரம் மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. குழந்தையில்லாதவர்கள் இந்த மரத்தில் சிறிய தொட்டில்கள் செய்து கட்டி வேண்டிக்கொள்வார்கள். குழந்தை பிறந்தவுடன் தொட்டில்களை நீக்கிவிட்டு சுவாமி தரிசனம் செய்துவிட்டு விட்டு செல்வார்கள்.


ஸ்தல வரலாறு; ஒரு காலத்தில் பிரம்மாவிற்கும், விஷ்னுவிற்கும் தமக்குள் யார் உயர்ந்தவர் என்ற சர்ச்சை உண்டாயிற்று. இதனால் இருவரும் சிவபெருமானை மத்யஸ்த்திற்கு அழைத்தார்கள். ஆகையால் சிவபெருமான் இவர்களின் உயர்வு தாழ்வு எண்ணத்தை போக்க ஒரு போட்டி வைத்தார். யார் முதலில் தன்னுடைய அடியையோ அல்லது முடியையோ பார்த்து
சொன்னால் அவர் தான் சிறந்தவர் என்றார். பிறகு சிவன் ஜோதிமயமாக தன் உருவை மாற்றிக் கொண்டார். இதனால் விஷ்னு வராக அவாதாரம் எடுத்து அடியை காண பூமியை குடைந்து சென்றார். ஆனால் அவரால் முடியவில்லை. தான் செய்தது தவறு என்று ஏற்றுக் கொண்டார். அதுபோல பிரம்மா அன்னப்பறவையாக மாறி முடியை தேடிச் சென்றார். இடையில் தாழம்பூ சிவனின் முடியிலிருந்து கீழே விழுவதை பார்த்துவிட்டு, சிவனின் முடியைக் காண இன்னும் எவ்வளவு தூரம் செல்ல வேண்டும் என்று கேட்டார். அதற்கு தாழம்பூ தாம் பல்லாயிற வருஷ காலமாக கீழே விழுவதால் தனக்கு தெரியவில்லை என்றது. இதனால் பிரம்மா தாம் தோர்க்கக்கூடாது என்ற எண்ணத்தினால் தாழம்பூவை தாம் சிவனின் முடியை பார்த்ததாக பொய் சாட்சி கூற கூறினார். இதற்கு தாழம்பூவும் ஒத்துக்கொண்டது. இதனால் கோவம் அடைந்த சிவபெருமான் பிரம்மாவிற்கு பூலோகத்தில் ஆலயம் அமையாதென்றும், பொய் சாட்சி சொன்ன தாழம்பூ
சிவபூஜைக்கு ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் சபித்தார். அப்படி ஜோதியாக சிவன் நின்ற அந்த இடம் தான் திருவண்ணாமலை ஸ்தலம்.


இத்தலத்தை ஒட்டிய மற்ற வரலாறு கதைகளை அடுத்த பதிவில் பார்க்கலாமா.....
(தொடரும்)                                        


                                             sarvam sivamayam

மரணம் இப்படித்தான் இருக்குமா...?


   






யோகி முதல் போகி வரை கேட்கப்படுகின்ற ஒரே கேள்வி நாம் எங்கிருந்து வந்தோம் எங்கே போகிறோம் என்பதுதான். 

போகுமிடம் என்றால் என்ன?  மரணத்திற்கப் பின் நம் உயிர் பறவைக்கு உடல் கூட்டிலிருந்து விடுதலை கிடைத்தபின் அது அடையக் கூடிய நிலை என்னவென்று நாம் தெரிந்து கொண்டால் போகும் இடத்தைப் பற்றிய விவரங்கள் சுலபமாகக் கிடைத்துவிடும்.  அத்தகைய உயர்நிலையை அறிந்துகொள்ள செத்துப் பிழைத்தவர்களின் அனுபவங்களை ஆதாரமாக கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை.


  செத்துப் பிழைத்தவர்கள் என்று கருதப்படும் பல நபர்களின் வாக்கு மூலங்கள் முழுமையாக நமக்குக் கிடைத்து இருக்கிறது.  இருப்பினும் பெரும்பாலான வாக்கு மூலங்களில் அந்தந்த நபர்களின் சுய கற்பனைகளும் பய உணர்ச்சியால் ஏற்பட்ட வார்த்தை தடுமாற்றங்களும் நிறைந்து இருக்கின்றன என்பதை மறப்பதற்கில்லை.  ஆனாலும் அந்த வாக்கு மூலங்களில் சில உண்மைகளும் பல ஒற்றுமைகளும் இருக்கிறது.  அவைகளைப் பற்றி சிறிது பார்ப்போம்.

 கனடா நாட்டைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒருவர் 1954ம் வருடம் மார்ச் மாதம் 17ம் தேதி காலை 8.30 மணிக்கு மரணம் அடைந்தார்.  அவர் மரணம் அடைந்து மூன்று மணி நேரம் கழித்து திடீரென தனது சாவுப்படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தார்.  வழி தவறி அடையாளம் தெரியாத இடத்தில் அகப்பட்டு மீண்டும் தனது சொந்த இடத்தை எதேச்சையாக அடைந்த நபர் போல மிரண்டுபோய் இருந்தார். அவரிடம் உங்களுக்கு என்ன நிகழ்ந்தது என்று கேட்டபோது காலையில் தன்னால் படுக்கையிலிருந்து எழுந்திருக்க முடியாத அளவிற்கு உடலில் இனம் தெரியாத வலி இருந்தது.  அதனால்தான் மிகவும் வேதனையும் சோர்வும் அனுபவித்தேன்.  திடீரென்று தன்முன்னே வெள்ளை நிறத்தில் தேவதைகள் போல் மூன்று நபர்கள் வந்தனர்.  அவர்கள் தன்னை தன் உடலுக்குள் இருந்து வெளியே இழுத்தனர்.  அப்போது படுக்கையில் கிடக்கும் எனது உடலைப் பூரணமாக என்னால் பார்க்க முடிந்தது.  அதன்பின் அந்த மூன்று நபர்களும் வெளிச்சம் மிகுந்த ஒரு பாதையில் தன்னை அழைத்துச் சென்றனர்.  அவர்களுக்குள் புரியாத பாஷையில் ஏதேதோ பேசிக் கொண்டனர்.  அதில் ஒரு வார்த்தைக் கூட எனக்குப் புரியவில்லை.  சிறிது தூரம் கடந்தபின் அவர்களுக்குள் பேசி ஏதோ முடிவுக்கு வந்து என்னை மீண்டும் உடம்பிற்குள்ளேயே தள்ளிவிட்டு விட்டனர்.  அதன்  பின்னரே தான் எழுந்து உட்கார்ந்ததாகவும் கூறினார்.  அந்த மூன்று தேவதைகளின் முக அழகு இன்னும் தனது மனதில் பூரணமாக நிறைந்து இருப்பதாகக் கூறி சந்தோஷப்பட்டார்.



  இதே போன்ற ஒரு சம்பவம் அபுதாபியில 1975ம் வருடம் ஜனவரி மாதம் நடந்தது.  30 வயது இளைஞர் ஒருவர் இதய நோய் கராணமாக மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார்.  அவர் இறந்து விட்டதாகக் கருதி உடல் ஆம்புலன்ஸ் வண்டியில் ஏற்றி வீட்டுக்கும் அனுப்பிவிட்டனர்.  உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருந்த போது உறவினர்கள் பிரமிப்பு அடையும் வகையில் மரணத்திவிருந்து எழுந்தார்.  எழுந்தவர் இரண்டு நாள்  வரையில் பித்து பிடித்தவர் போல் யாரிடமும் பேசாமல் இருந்தார்.  அதன் பிறகு கூறிய விஷயங்கள் எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியது.

 என் இதய வலியை நீக்கவும் இதயத் துடிப்பை சமப்படுத்தவும் டாக்டர்கள் போராடிக் கொண்டு இருந்தனர்.  என் மீது என்னென்னவோ கருவிகள் பொருத்தப்பட்டு இருந்தன.  அறை முழுவதும் மருந்துகளின் வாடை.  எனக்கு அந்கச் சூழல் பயத்தை மேலும் அதிகரித்தது.  அப்போது என் கண் முன்னே 3 நபர்கள் தோன்றினார்கள.  அவர்கள் கால்வரையில் வெள்ளை அங்கி அணிந்திருந்தார்கள் என நினைக்கிறேன்.  அவர்கள் மூன்று பேருமே வெளிச்சமாகவும் அழகாகவும் இருந்தனர். என்னை வா என்று அழைத்தனர்.



  நான் அவர்களின் அழைப்பை ஏற்று எழுந்தேன்.  ஆனால் என் உடல் படுக்கையில்தான் கிடந்தது.  கருவிகள் பொருத்தப்பட்டுக் கிடந்த என் உடலைப் பார்ப்பதற்கு எனக்கு அப்போது ஏனோ வேடிக்கையாக இருந்தது.  ஆனால் அந்த மூன்று பேரும் உடனடியாக என்னை அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.  மேலும் கீழும் மணலால் சூழப்பட்ட ஒரு சுரங்கப் பாதைக்குள் என்னைக் கூட்டிச் செல்வது போல் இருந்தது.  அந்த நிலையில அந்த மணல் சுரங்கம் எனக்குப் பயத்தையும் இனம் புரியாத திகிலையும் தந்தது. அங்கு இதுவரை நான் அனுபவித்து இராத உயரிய நறுமணம வீசியது.  சுரங்கத்திலிருந்து ஒரு மணல் அறைக்குள் என்னை அழைத்துச் சென்றனர். அந்த அறையினுள் வெளிச்சமும் குளிர்ச்சியும் இருந்தது.  அந்த 3 நபர்களும் திடீரென்று என்னை அந்த அறையினுள் இருந்து வெளியே கூட்டி வந்து என் வீட்டிற்குள் இருந்த உடம்பிற்குள் என்னைத் தள்ளி விட்டனர்.  அவர்கள் தள்ளிய வேகமும் உடலுக்குள் புகும்போது நான் அனுபவித்த இனம்புரியாத கிலியும் என்னை பிரம்மையில ஆழ்த்தி விட்டது என்று அவர் தனது அனுபவத்தை நெகிழ்ச்சியான வார்த்தைகளால் கூறினார்.



 ஐரோப்பாவிலும் அரேபியாவிலும் மட்டுமல்ல நம் நாட்டில் உத்திரப்பிரதேசத்திலும் இத்தகைய சம்பவம் நடந்து உள்ளது.  12 வயது மாட்டுக்காரச் சிறுவன் ஒருவன் மாடு மேய்க்கும் இடத்திலேயே இறந்து விட்டான்.  அதை அறிந்த அவனது நண்பர்கள் வீட்டிற்குத் தகவல் கொடுத்து உடலை எடுத்து சென்றனர்.  இறுதிச் சடங்கிற்கு மயானத்திற்கும் உடல் எடுத்துச் செல்லப்பட்டு தகனக்கிரிகைக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருந்த போது பாடையில் இருந்து சிறுவன் எழுந்து விட்டான்.  அதனைப் பார்த்த அங்கு இருந்த கிராம வாசிகள் பயத்தால் உறைந்து போயினர்.  சிலர் ஓடி விட்டனர்.  பாடையில் சென்ற சிறுவன் கால் நடையாக வீட்டிற்கு வந்தான். அவன் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தைக் கதை கதையாகச் சொல்ல ஆரம்பித்தான்.

 மாடுகளை எல்லாம் புல்வெளியில் ஓட்டடிவிட்டு மரத்தடியில் படுத்து இருந்தேன்.  மயக்கம் மாதிரி வந்தது காலையில் சாப்பிடவில்லை என்பதனால் பசி மயக்கமாக இருக்கும் எனக்கருதி தூக்கிலிருந்த சப்பாத்திகளைச் சாப்பிட எழுந்தேன்.  அப்போது ராம்லீலா நாடகத்தில் வருவது போல் ஆடை அணிந்த 3 பேர் என் முன்னால் வந்தனர்.  அவர்களைப் பர்ப்பதற்கு எனக்குச் சந்தோஷமாக இருந்தது.  என் பெயரைச் சொல்லி தங்களோடு வருமாறு என்னை அழைத்தனர்.  நான் மாடுகளை மறந்தேன்;  பசியை மறந்தேன்.  அப்போது அம்மா அப்பா ஞாபகம் கூட எனக்கு வரவில்லை. தங்கச்சி பாப்பா மட்டும் என்னை தேடுவாளோ என்று சிந்தித்தேன்.  ஆனால் உடனடியாக அவள் நினைவும் மறைந்தது. 





   நான் அவர்களோடு வெகு தூரம் போய்விட்டேன்.  கீழே கிடந்த எனது உடலை நண்பர்கள் உலுக்கி எடுப்பதைப் பார்த்தேன்.  அவர்கள் அப்படிச் செய்வது எனக்குச் சிரிப்பாக இருந்தது. மேகங்கள் வழியாக என்னை அவர்கள் அழைத்து போவது போல் இருந்தது.  அங்கே மிதந்து வரும் அழகான மரங்களையும் மலர்ச்செடிகளையும் பார்த்தேன்.  சில அருவிகள் கூட அங்கு இருந்தது அங்கு வெளிச்சமாக ஒருவர் இருந்தார் அவர் என்னை பார்க்கக்கூட இல்லை.  என்னை அழைத்து வந்தவர்களிடம் மட்டுமே ஏதோ பேசினார்.  நிச்சயமாக அவர் இந்தியில் பேசவில்லை.  என்ன பாஷை பேசினார் என்றும் எனக்குத் தெரியாது.  அவரை வணங்கிய அந்த 3 பேரும் என்னைத் திரும்ப அழைத்து வந்தனர்.  சிதைக்குப் பக்கத்திலிருந்த என் உடலுக்குள் என்னைக் திணிக்கப்படும்போது மட்டுமே பயமும் வேதனையும் சிறிது இருந்தது.  பின்னர் நான் எழுந்துவிட்டேன்  உயிர்  பிழைத்த இந்தியச் சிறுவன் இவ்வாறு கூறி முடித்தான்.

ஐரோப்பிய பெண்மணியின் அனுபவமும் அரேபிய இளைஞன் இந்தியச் சிறுவன் ஆகியோரின் அனுவங்கள்  மட்டுமே இங்கு கூறப்பட்டதற்கு முக்கியமாக காரணம் உண்டு.  இன்று உலகில் இருக்கும் கலாச்சாரங்களில் முக்கியமானது இந்து இஸ்லாம் கிருஸ்துவ கலாச்சாரங்களே ஆகும்.  அந்தந்த கலாச்சராத்திற்கு உட்பட்ட மனிதர்களின் எண்ண ஒட்டங்களும் தங்களது சுய கலாச்சாரத்தின் வெளிப்பாடாகவே அமையும் என்பது உலக நியதி.  அதன் அடிப்படையில் இந்த அனுபவங்களைக் தொகுத்து பகுத்து பார்க்கும்போது காலதேச சூழநிலையில் அனுபவசாலிகளின் தன்மைகள் மாறுபட்டு இருந்தாலும் அவர்கள் கூறும் விஷயத்தில் பல ஒற்றுமைகள் இருப்பதை அறிய முடிகிறது.

  செத்துப்பிழைத்த மூன்று பேருமே தங்களை மூன்று நபர்கள் வந்து அழைத்ததாகவும் தங்களது பூத உடலைத் தாங்களே பார்த்ததாகவும் மீண்டும் உடலுக்குள் உயிர் நுழையும் போது சிறய அளவில் வேதனையையும் பயத்தையும் அனுபவித்ததாகவும் கூறுகிறார்கள்.  இது எதேச்சையாகக் கூறப்பட்ட விஷயங்களாகக் கருத இயலாது.  இவர்களைத் தவிர மீண்டும் உயிர்பெற்ற பலரும் ஏறக்குறைய இதே மாதிரியான அனுபவங்களைத் தான் பெற்றதாகக் கூறுகிறார்கள்.

  தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியும் இன்னும் பல நவீன கருவிகளின் வளர்ச்சியும் பெருகி விட்ட இன்றைய கால கட்டத்தில் ஒருவரைப் போல் மற்றொருவர் கற்பனை செய்து கொள்வதும் திரித்துக் கூறுவதும் இயற்கையான விஷயம் தானே அதில் எந்த அளவிற்கு உண்மை இருக்கும் என்று சிலர் எண்ணக் கூடும்.  ஆனால் அந்த எண்ணம் நியாயமானது அல்ல.  கராணம் தகவல் தொழில் நுட்பம் என்பது இல்லாத ஆயிரக்கணக்கான ஆண்டுக்கு முன்னரே இந்த மாதிரியான அமானுஷ்ய விஷயங்களிலும் உலக அறிவைப் பற்றிய ஒற்றுமையான கருத்துக்கள் கூறப்பட்ட இருக்கிறது அவைகளை  தற்செயலாக நிகழந்தவைகள் அல்ல என்பதை ஆதாரங்களுடன் தெரிந்து கொண்டால் மேலே குறிப்பிட்ட மூன்று அனுபவங்களும் உண்மைக்குப் புறம்பானவைகள் அல்ல என்பது தெரியவரும்.

   பல லட்சம் வருடங்களுக்கு முன்பு தற்போது தனித்தனியாக உள்ள ஆஸ்திரேலியா அண்டார்ட்டிகா தென் அமெரிக்கா ஆப்பிரிக்கா இந்தியா ஆகிய பகுதிகள் ஒன்றாக இருந்தது என்றும் அதற்கு பெயர்தான் லெமூரியா கண்டம் என்றும் புவியியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள் தொடர்ச்சியான மிகப்பெரும் கடல் கோள்களால தாக்கப்பட்டு அந்தக் கண்டம் பல கூறுகளாகப் பிரிந்து விட்டது என்றும் வல்லுநர்கள் கருதுகிறார்கள்.  இதற்கு ஆதாராமாக ஆஸ்திரேலியா அண்டார்டிகா கண்டங்களில் உள்ள மலைத் தொடர்களின் அமைப்புகள் ஒரே மாதிரி இருப்பதாகவும் அதற்கு இரு கண்டங்களில் உள்ள கற்களின் அமைப்பை நுண்ணியமாக ஆராய்ந்த பின்பே இந்த முடிவுக்கு வந்ததாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.

  லெமுரியா கண்டம் இருந்ததற்கான ஆதாரமும் அது மிகப் பெரும் கடல் சீற்றத்தால் அழிந்து போய் இருப்பதற்கான ஆதாரமும் 19ம் நூற்றாண்டில்தான் கிடைத்தது என்று பிரிட்டீஷ் விஞ்ஞானிகள் கூறினாலும் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பே மிகப்பெரும் கடல் சீற்றம் ஏற்பட்டு பெரும் நிலப்பரப்பு ஒன்று அழிந்து போனதாக பாரதத்தின் புனித மிக்க பல நூல்கள் விரிவாக எடுத்துக் கூறுகின்றன.  அவற்றைப் பற்றி சிறிது பார்போம்.

 மாபெரும் ஜலப் பிரளயம் பூமியில் ஏற்பட்டது.  உலகெங்கும் உள்ள உயிர்கள் நீரில் மூழ்தி அழிந்த போது விஷ்ணு மச்ச அவதாரம் எடுத்து மனுவையும் மற்றைய ஜீவன்களின் ஒவ்வொரு ஜோடியையும் ஒரு பேழையில வைத்து ரட்சித்ததாக மச்ச புராணம் கூறுகிறது.  மேலும் இந்தக் கடல் கோள் பற்றி அதர்வண வேதத்தில் மிக விரிவாகக் கூறப்பட்டு இருக்கிறது. அதர்வண வேதத்தில் கூறப்பட்டு இருக்கின்ற கருத்துக்களே சுமேரியர்களின் பிரளயக் கதையாக இருக்கிறது என்று டாக்டர் ஹேன் என்பவர் சுறுகிறார்.  வேத நூலில் பிரளய காலத்தில் சத்ய வரத மனு என்பவர் உயிர்த்தொகுதிகள் அழிந்து போகாமல் காப்பாற்றியதாகவும் கூறப்படுகிறது. 

   பாகவத்தில் கடல்கோள் பற்றி வேதத்திலும் மச்சபுராணத்திலும் கூறப்பட்ட விஷயங்களே இருந்தாலும் உயிர் வகைகளைக் காப்பாற்றியது திராவிட பதி என்ற குறிப்பு உள்ளது.  சத்ய வரத மனுவைப் பற்றிய விளக்கத்தைப் பார்க்கும்போது அவன் பொதிகை மலையில் தவம் செய்தான் என்று இருக்கிறது. திராவிட பதியும் பொதிகை மலையில் தான் இருந்தான் என்று பாகவதம் கூறுகிறது.  எனவே இந்த இரண்டு பெயர்களும் ஒரே நபருக்கு உடையதுதான் என்ற முடிவுக்கு நாம் வர வேண்டி உள்ளது.

 தொல் பழமை காலத்தில் புகழ் பெற்ற நகரமாக விளங்கிய பாபிலோனில் ஜலப்பிரளயத்தைப் பற்றி ஒரு கதை உண்டு.  அது கி.மு. 300ம் ஆண்டுதான் எழுத்து வடிவம் பெற்றது.  பெரோஷஸ் என்பவர் இதை எழுதி வைத்தள்ளார். அதில் அணு என்பவன் பிரளயத்தின் போது உயிர்களை ரட்சித்து பாபிலோனியர்க்கு விவசாயம் செய்வது உட்பட நாகரீகங்கள் பலவற்றைக் கற்றுக் கொடுத்ததோடு மனிதத் தலைமுறைகளின் சட்டதிட்டங்களையும் வகுத்துக் கொடுத்தான் எனக் கூறப்படுகிறது.  வேதங்களில் வருகின்ற மனுவிற்கும் பெரோஷஸ் நூலில் குறிப்பிடப்படும் பிரளய காட்சிக்கும் அதிக வித்யாசம் இல்லை.

தென் அமெரிக்க நாட்டின் நடுப்பகுதியில் இன்கா என்ற பெயரில் பழங்குடி மக்கள் சிறிய குழுக்களாக வாழ்ந்து வருகிறார்கள்.  இவர்கள் தங்களது இனம் தோன்றிய விதத்தைப்பற்றி புராதனமான நம்பிக்கை ஒன்றை வைத்திருக்கிறார்கள்.  ஆரம்பக்காலத்தில் சூரியனும் சந்திரனும் இணைந்து இரு குழந்தைகளைப் பெற்றெடுத்தார்கள் என்றும் அதில் ஆண் குழந்தைக்கு யானாநாம்தா என்ற பெயரும் பெண் குழந்தைக்கு டுடா நாம்கா என்ற பெயருமாக வாழ்ந்து வந்தனர் என்றும் அவர்களின் சந்ததியில பாகாக்கா சம்பினாம்கா என்ற இரு வாரிசுகள் பிறந்ததாகவும் இவர்களிலிருந்துதான் மனுக்குலம் பல்கிப் பெருகியதாகவும் நம்புகிறார்கள்.

 இம்மக்களின் இந்த நம்பிக்கை கதையில் மேலும் சில தகவல்கள் கிடைக்கிறது.  பூமியில் ஜனப்பெருக்கம் அதிகமாகி விட்டதனால் அது பாரம் தாங்காமல் திணறியது.  அப்போது ஏற்பட்ட அழுத்தத்தின் காரணமாக மண்ணிற்குள் இருந்து தண்ணீர் கொப்பளித்து பிரவாகமாக வெளிப்பட்டது.  நிலப்பகுதி முழுமைக்கும் தண்ணீரின் அளவு ஏறிக்கொண்டே சென்றதனால் பாகாக்காவும் அவனது மனைவியும் கையில் கிடைத்த உயிரினங்களை எல்லாம் பிடித்து ஒரு பேழையில் அடைத்துக் கொண்டு தாங்களும் அதில் ஏறி ஜலப்பிரளயத்திலிருந்து தப்பி தண்ணீர் வடிந்தபின் பிரஜா உற்பத்தியில் ஈடுபட்டனர்.

 ஐரோப்பாவில் தென்கிழக்கு தீபகற்கபகுதியில் உள்ள வரலாற்றுப் பெருமைமிக்க கிரேக்க நாட்டிலும் இதே போன்ற ஒரு கதை உள்ளது.  அந்தக் கதையில் டியூக்கேளியன் என்று ஒரு மனிதன் இருந்ததாகவும் அவனுக்கு பிர்ரஹா என்ற மனைவியின் மூலம் ஹெலின் என்ற மகன் இருந்ததாகவும் இந்த மகன் காலத்தில் உலகெங்கும் தீமை கோரமாகத் தலைவிரித்து ஆடியதாகவும் இதனால் கிரேக்கர்களின் பெரிய தெய்வம் கோபம் கொண்டு பூமியில் பெரும் மழையை ஏற்படுத்தியதாகவும் இதனால் வெள்ளம்  நாலாபுறமும் சூழ்ந்து உயிர்களைக் கபளிகரம் செய்ததாகவும் ஹெலினும் அவனது இளம் மனைவியும் படகில் தப்பி பூமியின் தெற்குப் பகுதிக்குச் சென்று மனித உற்பத்தியை ஆரம்பித்தாகவும் கிரேக்கக் கதை கூறுகிறது.

 சிலப்பதிகாரம் இந்த மகா ஊழிக் காலத்தை

பஃறுளியாற்றுடன்
பன்மலையடுக்கத்துக்
குமரிக்கோடும்
கொடுங்கடல் கொள்ள

என்று கூறுகிறது.  அதாவது கடைச் சங்க காலத்தில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு குமரிக் கண்டத்தை (லெமுரியா) கடல் கொண்டபோது தற்போது இருக்கும் இமயமலையை விட பல மடங்கு பெரிதான குமரிக்கோடு என்ற மாமலையையும் அதிலிருந்து உற்பத்தியான குமரி ஆறு பஃறுளியாறு ஆகிய இரு நதிகளையும் கடல் கபளீகரம் செய்திருப்பதைத் தமிழ் பேரகராதி குமரி ஆறு என்ற தலைப்பின் கீழ் இவ்வாறு குறிப்பிடுகிறது.

இது தென்பாற் கண்ணதாகிய ஒராறு இதனையுள்ளிட்ட நாற்பத்தொன்பது நாடுகள் கடையூழி இறுதிக் காலத்தில் கடல் கொண்டழிந்து போயின.  அதன் வடபால் நாடு பின்னர்க் குமரிநாடு என்றும் அக்கடல் குமரிப் பௌவ மென்றும் பழைய பெயரே பெற்று வழங்கப்படுவன வாயின

  இப்படி உலகம் முழுவதும் உள்ள புராண இதிகாசங்களும் கர்ண பரம்பரை நம்பிக்கைகளும் ஜலப்பிரளயம் ஒன்று பூமியில் ஏற்பட்டு ஒரு கண்டத்தையே அழித்த விதத்தை பல கோணங்களில் வேறு வேறு வார்த்தைகளில் குறிப்பிட்டாலும் அவைகள் அனைத்தும் ஒரே விஷயத்தைத்தான் கூறுகின்றன என்பதை நம்மால் உணர முடிகிறது.

இப்படி பிரளயத்தப் பற்றிய ஒற்றுமைக் கூற்றுகள் உள்ளது போலவே சாவு அனுபவங்களைப் பற்றியும் ஒற்றுமையான கருத்துக்கள் தான் சொல்லப்பட்டுள்ளன இத்த கூற்றுக்கள் எவற்றையும் அறிவியல் ஏற்றுக் கொள்ளாது மாறாக எள்ளிநகையாடும் என்று நமக்குத் தெரியும் ஆனால் உண்மைகள் எப்போதும் விஞ்சானத் தன்மை பெற்றதாக மட்டும்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை எனவே மரண அனுபவம் இப்படியும் இருக்கலாம் என நாம் நம்பலாம் இருப்பினும் இன்னும் சரியான முறையில் ஆய்வுகள் நடந்தால் பல உண்மைகளை மனிதகுலம் பெறலாம்
  NKSHARMA